Wednesday, June 17, 2026

இனி காவல்துறைக்கு எதிராக முறைப்பாடா? அல்லது பாராட்டா? நேரடியாக சொல்ல புதிய QR வசதி அறிமுகம்!

 

இலங்கை காவல்துறையினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான, புதிய QR குறியீட்டு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் சேவைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை நேரடியாக வழங்குவதற்காக, Sri Lanka Police Community Feedback Portal என்ற இணையவழி டிஜிட்டல் தளம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகள் கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்து மக்களை மையமாகக் கொண்ட திறமையான சேவையை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

QR குறியீட்டைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து தகவல்களைப் பதிவுசெய்ய முடியும்.

அத்துடன், விருப்பமுள்ளவர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையும் வழங்க முடியும்.

காவல் நிலையத்திற்கு வந்ததற்கான காரணம் அல்லது சம்பவம் தொடர்பான விபரங்களையும் பதிவு செய்யும் வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் E-Services என்ற பகுதி மூலமாகவும் இந்த Community Feedback Portal தளத்தை அணுக முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்புப் பிரிவுகள் மற்றும் முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கு அருகில் QR குறியீட்டுப் பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment